லடாக்கின் பாங்காங் பகுதியில் படைகள் முழுவதும் வாபஸ்

லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து இந்தியா, சீனாபடைகள் முழுவதும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 10-வது பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லடாக் எல்லையில் உள்ள பாங்காங்சோ ஏரி பகுதியை ஆக்கிரமிக்க சீன ராணுவ வீரர்கள் முயற்சித்தனர். அதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் இரு தரப்பிலும் கூடுதல் வீரர்கள், ராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டன.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. இதை தணிக்கஇந்தியா - சீனா இடையே ராணுவஉயரதிகாரிகள் அளவில் இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பிலும் படைகளை குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி, பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து படை வீரர்கள், ராணுவ தளவாடங்களை திரும்பப் பெறும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி முடிவடைந்துவிட்டதாக கடந்த 18-ம் தேதி இருதரப்பிலும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை, சீனப் பகுதியில் உள்ளசுஷுல்-மோல்டோ என்ற இடத்தில்நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தியா தரப்பில் 14-வதுபடைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், சீனா தரப்பில் ஜின்ஜியாங் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியூ லின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், காக்ரா, டெம்சாக், டெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுபோல, சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க, ரஷ்ய உளவுத் துறை தெரிவித்தது. ஆனால் இதை சீனா உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 5 ராணுவ அதிகாரிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சியை சீன அரசு ஊடகம் நேற்று வெளியிட்டது. அதில் இருதரப்பு ராணுவ வீரர்களும் ஒரு ஆற்றைக் கடந்து செல்கின்றனர். பின்னர் ஒரிடத்தில், பின்னோக்கி செல்லுமாறு ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளுகின்றனர். இரவு நேரமான நிலையில், இருதரப்பினரும் பிளாஷ்லைட், கம்பு மற்றும் பாதுகாப்பு கவசத்துடன் ஒரு மலை முகடில் நின்று கூச்சலிடுகின்றனர்.

இந்த வீடியோவை சுட்டிக்காட்டி, இந்திய வீரர்கள் அத்துமீறி சீன பகுதிக்குள் ஊடுருவியதாக சீன அரசு ஊடக ஆய்வாளர் ஷென் ஷிவே குற்றம்சாட்டி உள்ளார்.

Google+ Linkedin Youtube