மத்திய அரசின் திடீர் தடை உத்தரவால் ராணிப்பேட்டையில் முடங்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

மத்திய அரசின் திடீர் தடை உத்தரவால் ராணிப்பேட்டையில் முடங்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள்: 50 சதவீதம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய கோரிக்கை

தொழிற்சாலைகளுக்கான திரவ ஆக்சிஜன் சிலிண்டர் விநியோக தடையால் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடர முடியாமல் முடங்கியுள்ளன. எனவே, 50 சதவீதம் ஆக்சிஜன் சிலிண்டர் களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை பெல் ஆன்சிலரி சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பெல் நிறுவனத்தை நம்பி பெல் ஆன்சிலரி யூனிட் என்ற பெயரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 8 ஆயிரம் பேர் என வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கால் திணறிய இந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் மெல்ல மெல்ல மீண்டு வந்தனர். தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பியவர்களுக்கு கரோனா இரண்டாம் அலை மீண்டும் பெரிய இடியாக அமைந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்காவிட்டாலும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ராணிப்பேட்டையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை முற்றிலும் பாதித்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு மனித உயிர்களை மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளையும் முடக்கி யுள்ளது.

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ‘ஜாப் ஒர்க்’ முறையில் பணிகளை பெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முதல் வேலையே ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால்தான் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அவர்களிடம் வழங்கப்படும் இரும்பை வெட்டினால்தான் அடுத்த கட்ட பணிக்கு செல்ல முடியும் என்பதால் ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம் தேவை என்ற நிலை உள்ளது.

ராணிப்பேட்டையில் உள்ள பெல் துணை நிறுவனங்களுக்கு கடந்த நான்கு நாட்களாக ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் முடங்கியுள்ளன. இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என தெரியாது என்பதால் சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை பெல் ஆன்சிலரி சங்கத்தின் தலைவர் வாகீசன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘தமிழகம் முழுதும் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பணியில் ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெரும்புதூர் அருகே செயல்படும் இந்த நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் துணை மையங்களை நிறுவியுள்ளது. ராணிப்பேட்டையில் இந்த நிறுவனத்துக்கு என்று 25 டன் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட மையம் உள்ளது. இங்கிருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ராணிப்பேட்டையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம்.

அதேநேரம், இரும்பு உருக்காலைகள், உர நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய தடை விதிக்கவில்லை. எங்களுக்கு 50 சதவீதம் சிலிண்டர்களை வழங்கினால் எங்கள் நிறுவனங்களை ஓரளவுக்கு நடத்த முடியும். இல்லாவிட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

Google+ Linkedin Youtube