டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் 25 பேர் பலி

டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் 25 பேர் பலி: முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வேண்டுகோள்

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணிநேரத்தில் கரோனோ நோயாளிகள் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குறைந்த அழுத்தத்தில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்கா ராம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்க இன்னும் 2 மணிநேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கிறது. 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால், உடனடியாக ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்யவும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவசரமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் இயக்குநர் கூறுகையில் “ கங்கா ராம் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 140-க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் தீவிரமான நிலையில் இருந்த நோயாளிகள் 25பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 2 மணிநேரத்துக்கு மட்டுமேஆக்ஸிஜன் இருப்பு இருக்கிறது, 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள். வெண்டிலேட்டர், பிபாப் போன்ற கருவிகள் முறையாகச் செயல்படவில்லை. விமானத்தில் மூலமாவது உடனடியாக ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்துவருகிறது. தொடர்ந்து 2-வது நாளாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதால், தேவையான ஆக்ஸிஜனை உடனே வழங்கக் கோரி மத்தியஅரசுக்கு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்தியஅரசும் துரிதமான நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் சப்ளையை தீவிரப்படுத்தி வருகிறது. இருப்பினும் பல்ேவறு மாநிலங்களில் கரோனா நோயாளிகள் உயிரிழப்பு தொடர்கிறது.
டெல்லியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 26,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 306 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google+ Linkedin Youtube