மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி

‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை வெளியான தனுஷ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ‘கர்ணன்’ பெற்றுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (22.04.21) உறுதி செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்.

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

'கர்ணன்' படத்துக்குப் பிறகு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்குப் பிறகே மாரி செல்வராஜ் - தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Google+ Linkedin Youtube