குமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், செய்வதறியாது மாவட்ட நிர்வாகம்

குமரி மாவட்டம் குழித்துறையில் ரயில் மறியல், குளச்சல், மணவாளக்குறிச்சி, தேங்காப்பட்டணத்தில் ரோடு மறியல் என ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், செய்வதறியாது மாவட்ட நிர்வாகம் திகைத்து நிற்கிறது.

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை 100 அல்லது 200 தான் என்று அரசு குறைத்து கூறுவதாக மீனவர்கள் கோபம் அடைந்துள்ளனர். 1013 மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு தலைவர் சர்ச்சில் கூறுகிறார். 

இதற்கிடையில் இறந்தவர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததால் ஆவேசம் அடைந்த மீனவர்கள், நேற்று முன்தினம் காலையில் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். இரவு 12:00 மணிக்கு 10 லட்சம் தருவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததால் போராட்டம் விலக்கி கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட மறுத்தனர். பின்னர் ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது. தற்போது குழித்துறை ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குளச்சல், குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலனி, கொட்டில்பாடு, புதுார், பெரியவிளை, சின்னவிளை ஆகிய 9 மீனவ கிராம மக்கள் நேற்று குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் கூடினர். பின்னர் அவர்கள் பாதிரியார்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து குளச்சல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மணவாளக்குறிச்சியில் முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேங்காப்பட்டணத்திலும் மறியல் நடந்தது. காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிக்க விரைவான நடவடிக்கை, 20 லட்சம் ரூபாய் நிவாரணம், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

குளச்சல் பகுதியில் அதிக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் திரண்டு வந்த ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தை பார்தது போலீசார் கை கட்டி நின்றனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். எப்படி பேசுவது? எப்படி போராட்டத்தை தவிர்ப்பது என்பது பற்றி தெரியாமல் மாவட்ட நிர்வாகமும் தவிக்கிறது. 

போராடுபவர்களை விரட்டவும்,முடியாமல் அவர்களுடன் பேசவும் முடியாமல் திணறி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேசச் செல்லும் அதிகாரிகள் கலெக்டராக இருந்தாலும் அவர்களை வசைமாரி பொழிகின்றனர். இதனால் மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.

Google+ Linkedin Youtube