3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்?: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக்

2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, குறிப்பாக லார்ட்ஸில் படுஇன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து களபலிக்கு இந்திய அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது.

வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் தினேஷ் கார்த்திக் சக வீரர் ரிஷப் பந்த்திற்கு பந்துகளை வீசி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு பந்தை சேகரிக்கும் போது கார்த்திக் முகத்தில் வலி தெரிந்தது. ஓவர் முடிந்தவுடன் அணியின் உடற்பயிற்சியாளர் கார்த்திக்கு சிகிச்சை அளித்தார். விரல்களில் டேப் சுற்றப்பட்டது. பிறகு அவர் காயம் பெரிதாக இல்லை என்பது போல்தான் தெரிந்தது. ஆனாலும் ‘காயம் காரணமாக’ தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ‘இளம் ரத்தம்’ ரிஷப் பந்த்தை களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.

விக்கெட் கீப்பிங்கில் ஓரளவுக்கு பரவாயில்லையாகச் செயல்பட்ட கார்த்திக் பேட்டிங்கில் கடும் சொதப்பல். கங்குலி இவருக்கு பயிற்சியில் கூட பந்துகள் மட்டையில் படுவதில்லை என்று விமர்சித்ததும் வைரலானது. இரண்டு டக்குகளுடன் 21 ரன்களையே எடுத்தார். இருமுறை பவுல்டு ஒரு முறை எல்.பி.ஆனார்.

வலைப்பயிற்சியில் ஸ்பெஷலிட்ஸ் பேட்ஸ்மென்கள் பயிற்சிக்குப் பிறகு ரிஷப் பந்த் பேட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு சென்ற இந்தியா ஏ அணிக்கு ஆடிய ரிஷப் பந்த் 3 அரைசதங்களை அடித்துள்ளார், ராகுல் திராவிட் இவரது அதிரடி திறமையையும் அதே வேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி ஆடும் திறமையையும் விதந்தோதியுள்ளார்.

ரிஷப் பந்த் அணிக்குள் வருவாரா என்பதற்கு வழக்கம் போலவே ரவிசாஸ்திரி குழப்பவாத பதிலை அளிக்கும் போது, “சனிக்கிழமை காலை 11.00 மணி வரை பதிலுக்குக் காத்திருங்கள்” என்று கூறினார்.

இதற்கிடையே விராட் கோலியும் முழு உடல்தகுதி பெற்று டிரெண்ட் பிரிட்ஜ் சவாலுக்குத் தயாராகிவிட்டார் என்று இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Google+ Linkedin Youtube