வெப் சீரிஸாக உருவாகும் ‘வடசென்னை’ ராஜன் கதாபாத்திரம்

‘வடசென்னை’ ராஜன் கதாபாத்திரம், வெப் சீரிஸாக உருவாக இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிபெற்ற படம் ‘வடசென்னை’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் படத்தின், முதல் பாகம் இது. இந்தப் படத்தில், ராஜன் என்ற கதாபாத்திரத்தில் அமீர் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் தான் படத்தின் மையமாக இருந்தது. அதைச் சுற்றித்தான் மற்றவர்களின் கதாபாத்திரங்கள் நகரும்.

இந்நிலையில், ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். ராஜனின் சின்ன வயது முதல், அவன் எப்படி ரவுடியாக மாறினான் என்பது உள்ளிட்ட ராஜனின் மொத்த வாழ்க்கையும் இதில் சொல்லப்பட இருக்கிறது. இந்த வெப் சீரிஸுக்கு ‘ராஜன் வகையறா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இதிலும் தனுஷே ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு வெப் சீரிஸை இயக்குகிறார் வெற்றிமாறன்.

Google+ Linkedin Youtube