சிவகுமாரின் செல்ஃபி விவகாரம்: கஸ்தூரியின் கிண்டலால் கோபமான கார்த்தி

சிவகுமாரின் செல்ஃபி விவகாரத்தை முன்வைத்து, கார்த்தியிடம் கஸ்தூரி நடந்து கொண்ட விதம் பலரையும் கோபமடைய வைத்தது.

ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜூலை காற்றில்'. கே.சி.சுந்தரம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். இதில் கார்த்தியைப் பேச அழைக்கும் போது, கையில் செல்போனை வைத்துக் கொண்டு "இங்கு வாங்களேன்.. நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்" என்று அழைத்தார்.

அப்போது வந்த கார்த்தியிடம் கையில் செல்போனை வைத்துக் கொண்டு "உங்க அப்பா இல்லை. ஆகையால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். இதற்கு "இது தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது" என்று முகத்தை திருப்பிக் கொண்டு மைக்கில் பேசத் தொடங்கினார்.

அப்போது கார்த்தி "செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கொண்டுவந்து கேமராவை நிறுத்துகிறார்கள். பின்னால் ஒரு ப்ளாஷ், முன்னால் ஒரு ப்ளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே கிடையாது என நினைக்கிறேன்.

போட்டோ எடுப்பதைக் கூட ஒரு மரியாதையாகக் கேட்டு எடுப்பது கூட தெரியாத அளவுக்கு ஆயிட்டோமா என்று வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் சொல்ல முடியாது" என்று பேசினார்.

Google+ Linkedin Youtube