‘சர்கார்’ எதிரொலி; ‘49 பி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவு குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் விஜய், தேர்தலில் தான் வாக்கைச் செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால், அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார் விஜய்.

பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு பரவலாகத் தெரியவந்தது. ‘நோட்டா’வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.

இந்நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘49 பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்தச் சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

“மகிழ்ச்சி, தேர்தல் ஆணையம் ‘49 பி’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Google+ Linkedin Youtube