சிம்புவின் ‘மாநாடு’ கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்

சிம்புவின் ‘மாநாடு’ கைவிடப்பட்டது என பரவிக் கொண்டிருக்கும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அத்துடன், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் விவரமும் அறிவிக்கப்படவில்லை.

இதனால், ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

“படம் கைவிடப்பட்டது என பரவிக் கொண்டிருக்கும் பொய்ச் செய்தியை நிறுத்துமாறு வேண்டுகிறேன். படத்தைத் தொடங்குவது என்பது சாதாரண விஷயமில்லை. உங்கள் பொய்ச் செய்தியை நிறுத்துங்கள். ‘மாநாடு’ குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

கதை விவாதம் மற்றும் முன்தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

Google+ Linkedin Youtube