குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியாரே, அனுஷ்கா திரையுலகுக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன? எந்த படத்தில் அறிமுகமானார்? அவர் முக்கியத்துவம் கொடுப்பது தமிழ் படத்துக்கா அல்லது தெலுங்கு படத்துக்கா? (பெ.கணபதிராஜ், சென்னை–1)

அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றன. அவர், ‘சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தமிழில் சுந்தர் சி. இயக்கிய ‘ரெண்டு’ படத்தில், மாதவன் ஜோடியாக அறிமுகமானார். தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்களுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்!

***

இந்திய சினிமாவில் முதன் முதலாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய திகில் படம் எது? அது எந்த வருடம் வெளியானது? (பி.வெற்றிவேல், உடையாப்பட்டி)

இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய முதல் திகில் படம், ‘பீசால் பாத்.’ இந்தியில் தயாரான இந்த படம், 1962–ம் ஆண்டில் திரைக்கு வந்தது.

***

குருவியாரே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்து, ஸ்ரீதர் இயக்கிய படம் எது? அந்த படத்தின் சிறப்பு அம்சம் எது? (கே.மோகன், காஞ்சிபுரம்)

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது. அந்த படத்தில், இளையராஜா இசையில் இனிமையான பாடல்கள் இடம் பெற்று இருந்தன!

***

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தில், நயன்தாரா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘பிகில்’ படத்தில் நயன்தாரா, ‘பிசியோதெரப்பிஸ்ட்’ ஆக நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகனாக உயர்ந்த பிறகும் மற்ற கதாநாயகர்களின் படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்கிறாரே? (ஏ.அமல்ராஜ், நாகர்கோவில்)

அது, அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், வில்லன் மற்றும் குணச்சித்ர பாத்திரங்களிலும் தன் திறமையை காட்ட முடியும் என்று நிரூபித்து வருகிறார், விஜய் சேதுபதி!

***

அஞ்சலி ஒரு படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாராமே...அது உண்மையா? (வி.ஜெயப்பிஅகாஷ், அருப்புக்கோட்டை)

உண்மைதான். அந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்து இருப்பதால், ஜோடி பற்றி கவலைப்படவில்லை என்கிறார், அஞ்சலி!

***

குருவியாரே, சூர்யா, ‘அகரம்’ அறக்கட்டளையை தொடங்கி எத்தனை வருடங்கள் ஆகின்றன? அந்த அறக்கட்டளை மூலம் பயன்பெற்று இருப்பவர்கள் எத்தனை பேர்? (ஆர்.தனசேகரன், மேட்டுப்பாளையம்)

சூர்யா, ‘அகரம்’ அறக்கட்டளையை தொடங்கி 14 வருடங்கள் ஆகின்றன. அந்த அமைப்பின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்!

***

‘‘திரைப்படங்கள் மூலம் கருத்து சொல்ல அவசியம் இல்லை’’ என்று ரகுல் பிரீத்சிங் கூறியிருக்கிறாரே, அது சரிதானா? (எம்.செண்பகமூர்த்தி, மயிலாடுதுறை)

அது, ரகுல் பிரீத்சிங்கின் தனிப்பட்ட கருத்து. அவருடைய எண்ணங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்!

***

குருவியாரே, திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்–மனைவி போல் குடும்பம் நடத்தும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறதா, குறைந்து வருகிறதா? (எஸ்.கோதண்டராமன், ஸ்ரீரங்கம்)

திருமணம் செய்யாமல் கணவன்–மனைவி போல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் ஜோடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். குறையவில்லை!

***

‘ஈரமான ரோஜாவே’ படத்தை இயக்கியவர் யார்? அந்த படத்தின் காதல் ஜோடியான சிவா–மோகினி இருவரும் என்ன செய்கிறார்கள்? (டி.சுனில்குமார், வேதாரண்யம்)

‘ஈரமான ரோஜாவே’ படத்தை இயக்கியவர், கேயார். அந்த படத்தில் நடித்த சிவா தற்போது, ‘சின்னத்திரை’ தொடரில் நடித்து வருகிறார். மோகினி, ‘வெள்ளித்திரை’யில் மீண்டும் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்!

***

குருவியாரே, கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா? அல்லது புதிய படங்களில் நடிப்பதை தவிர்க்கிறாரா? (ஜி.கே.குமாரசாமி, கோவில்பட்டி)

புதிய படங்களில் நடிப்பதை கீர்த்தி சுரேசே தவிர்த்து வருவதாக தகவல். அவருக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்புவதாக பேசப்படுகிறது!

***

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவாரா? (எஸ்.தேன்ராஜ், சிவகங்கை)

தெலுங்கு படம் ஒன்றில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஐஸ்வர்யாராய் சம்மதித்து இருக்கிறார். அங்கே கொடுத்தது போல் ‘பெரிய தொகை’யை சம்பளமாக கொடுத்தால், இங்கேயும் ஒரு பாடலுக்கு ஆடுவாராம்!

***

குருவியாரே, ‘தெத்துப்பல் அழகி’ நந்திதா ஸ்வேதா சரளமாக தமிழ் பேசுகிறாரே, அவருடைய சொந்த ஊர் எது? (என்.ராஜ்குமார், ஈரோடு)

நந்திதா ஸ்வேதா, பெங்களூருவை சேர்ந்தவர். பொதுவாகவே பெங்களூருவை சேர்ந்த நடிகைகள் சரளமாக தமிழ் பேசுவார்கள். அதற்கு நந்திதா ஸ்வேதாவும் விதிவிலக்கு அல்ல!

***

இப்போதெல்லாம் பக்தி படங்கள் தயாராவதில்லையே...ஏன்? (ஏ.ராசிக், வண்டலூர்)

பேய் படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதுதான் காரணம்!

***

குருவியாரே, ஹன்சிகாவும், தன்சிகாவும் உடன்பிறந்த சகோதரிகளா? (சி.யோகராஜ், பண்ருட்டி)

இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் அல்ல; ஹன்சிகா மும்பையை சேர்ந்தவர். தன்சிகா, தமிழ் பெண்!

***

டைரக்டர் சேரன் எந்த டைரக்டரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்? அவர் இயக்கிய முதல் படம் எது? (வெ.அன்பரசு, திருக்கோவிலூர்)

சேரன், பார்த்திபனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். அவர் இயக்கிய முதல் படம், ‘பாரதி கண்ணம்மா!’

***

குருவியாரே, தமிழ் பட உலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய டைரக்டர் யார்? பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இசையமைப்பாளர் யார்? (ஜி.ஆனந்த், சேலம்)

தமிழ் பட உலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய டைரக்டர், பாரதிராஜா. இவருடைய வருகைக்குப்பின்தான் ஸ்டூடியோவுக்குள் இருந்த சினிமா, வெளியுலகுக்கு வந்தது. இந்தி பாடல்களால் வசியம் செய்யப்பட்டிருந்த தமிழ் ரசிகர்களை, அதன் பிடியில் இருந்து மீட்ட இசையமைப்பாளர், இளையராஜா. இவருடைய வருகைக்கு பிறகே தமிழ் சினிமாவின் இசையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது!

***

விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்கும் டைரக்டர் யார்? (எம்.எழில்வேந்தன், பூந்தமல்லி)

விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர், அஜய் ஞானமுத்து!

***

குருவியாரே, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு புதுசாக சென்ற நட்சத்திரம் யார்? (ஜே.ஜாஸ்மின், தூத்துக்குடி)

பூர்ணிமா பாக்யராஜ்! இவர், ‘கண்மணி’ என்ற தொடரில் நடித்து வருகிறார்!

***

அடிக்கடி சிகையலங்காரத்தை மாற்றும் நடிகை யார்? (எல்.அரவிந்த், புதுச்சேரி)

பூர்ணா! இவர், ஒரு படத்துக்காக தனது நீளமான தலைமுடியை தியாகம் செய்து, மொட்டை கூட போட்டார். பின்னர் தனது கூந்தலை, ‘பாப் கட்டிங்’ செய்து கொண்டார். இப்போது, ‘பாப் கட்டிங்’கில் இருந்து நீளமான கூந்தலுக்கு மாறி வருகிறார்!

***

Google+ Linkedin Youtube