மாலி நாட்டில் சாலையோர குண்டு வெடித்ததில் ஐ.நா. அமைதி தூதர் பலி

அகுவெல்ஹோக்,

மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன.  அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.  எனினும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அந்த பகுதியில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த 2013ம் ஆண்டில் ஐ.நா.வின் பன்னோக்கு ஒருங்கிணைந்த நிலைப்படுத்துதல் இயக்கம் மாலி நாட்டில் தொடங்கப்பட்டது.  அதன்பின்பு அந்த இயக்கத்தினர் மீது நடந்த தாக்குதலில் இதுவரை ஐ.நா.வுக்கான அமைதி தூதர்களில் 200 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மாலியின் வடகிழக்கில் அகுவெல்ஹோக் நகரில் அமைதி தூதர்கள் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.  அவர்கள் சென்ற வாகனம் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் சிக்கி கொண்டது.

இந்த சம்பவத்தில் அமைதி தூதர் ஒருவர் பலியானார்.  5 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு குழு பொறுப்பேற்று கொண்டது.  அதேவேளையில், பண்டியாகரா நகரில் ஐ.நா.வுக்கான அமைதி தூதர்களை இலக்காக கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

கடந்த ஜனவரியில் அகுவெல்ஹோக் நகரில் இதேபோன்று ஜிகாதி குழுக்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வுக்கான அமைதி தூதர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

Google+ Linkedin Youtube