சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கரோனா: உத்தரகண்ட் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தனிமை

உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத், உள்பட 3 அமைச்சர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில் “உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் சத்பால் மகாராஜ். இவரின் மனைவி குடும்பத்தார் என மொத்தம் 21 பேர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால் அமைச்சர் சத்பால் சிங்குடன் பழகியவர்கள்அனைவரும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். கடந்த வாரத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துடனும், அமைச்சர்களுடனும் சேர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் மகராஜ் பங்கேற்றிருந்தார். இதனால் அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால், மாநில சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலில், அமைச்சர்கள், முதல்வர் அனைவரும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் தொற்றுபரவ வாய்ப்பில்லை ஆதலால் தனிமைப்படுத்த தேவையில்லை என்று மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் தெரிவித்தது.

ஆனால், இதை ஏற்க முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மறுத்துவிட்டார். முதல்வர் ராவத்தும், உடன் ஹராக் சிங் ராவத், மதன் கவுசிக், சுபோத் உனியால் ஆகிய 3 அமைச்சர்களும் தங்கள் கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர். முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவரின் பணிகளை கல்வித்துறை அமைச்சர் தனசிங் ராவத் கவனிப்பார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சத்பால் மகராஜ்ஜின் இருமகன்கள், அவர்களின் மனைவி, பிள்ளைகள் அனைவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் மீண்டும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டனர்.

தற்போது அமைச்சர் மகராஜ் ,அவரின் குடும்பத்தார் அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Google+ Linkedin Youtube