இந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்: ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா ஏற்கெனவே பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதால் இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட முழு தொடரை விளையாட இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. இதில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி, அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் இந்தியா தரப்பு ஏற்பாடு செய்திருந்த ஃபேஸ்புக் நேரலையில் பேசிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், "நாங்கள் இந்தியாவை விட கூடுதலாக பிங்க் பந்து போட்டிகளில் ஆடியிருக்கிறோம். இது ஒரு சின்ன சாதகமாக இருக்கலாம். இந்தியா கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது. அது வேறு ஆட்டம்தான். ஆனால், அவர்களிடம் கடினமான சூழலில் தோள் கொடுக்கும் பேட்ஸ்மென்கள் உள்ளனர். தரமான வேகத்தோடு வீசும் பந்துவீச்சும் உள்ளது. எந்த சூழலுக்கும் ஏற்றவாறு ஆடும் உலகத்தரம் கொண்ட வீரர்கள் அவர்கள். அதனால் எங்கள் போட்டி சுவாரசியமானதாக இருக்கப் போகிறது" என்றார்.

காபா மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி பற்றிப் பேசுகையில், "காபாவில் எல்லா அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் சிறப்பாக ஆடியுள்ளோம். அது எங்கள் கோட்டையைப் போன்றது. நீண்டகாலமாக தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை அங்கு ஆட வேண்டும் என்று விரும்பியுள்ளோம்" என்று கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கோப்பை தற்போது இந்தியாவின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube