தொடர்ந்து மக்களுக்கு பணம் அளிக்கும் நிலையில் நாம் இல்லை: ஊரடங்கை விலக்கியது குறித்து இம்ரான் கருத்து

பாகிஸ்தானில் தொற்று மற்றும் இறப்புகள் கரோனா வைரஸால் அதிகரித்தபோதிலும் பொருளாதாரம் காரணமாக அங்கு ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார சரிவையும், பெரும் வேலை இழப்பையும் உலக நாடுகள் சந்தித்துள்ளன. இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு பல்வேறு நாடுகள் ஊரடங்கில் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானும் ஊரடங்கை நீக்கி உள்ளது. இதன் காரணமாக பிரதமர் இம்ரான் கான் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் ஊரடங்கை நீக்கியது குறித்து இம்ரான் கான் தொலைக்காட்சியில் உரையாடினார்.

அதில் இம்ரான் கான் கூறியதாவது, “ஊரடங்கால் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது. பாகிஸ்தானில் 2 கோடிக்கு அதிகமான தினக் கூலிகள் உள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். நாம் தொடர்ந்து மக்களுக்கு பணம் அளிக்கும் நிலையில் இல்லை.

எவ்வளவு காலம் நாம் பணம் அளிக்க முடியும். கரோனா வைரஸ் மேலும் பரவும். இந்த வைரஸ் காரணமாக அதிக இறப்புகள் இருக்கும் என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் தங்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டால் அவர்கள் அந்த வைரஸுடன் வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரஸுக்கு 72,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,543 பேர் பலியாகி உள்ளனர். 26,083 பேர் குணமடைந்துள்ளனர்

Google+ Linkedin Youtube