சீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சீன நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளையும் அவர்களின் பக்கங்களுக்கே சென்று கலாய்த்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் மனநிலையைப் படித்திருகும் சில சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், அவர்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் விதத்தை இப்போதைக்கு மாற்றியுள்ளனர்.

ஜியோமி இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின், எம் ஐ நோட்புக்கின் விற்பனை குறித்துப் பகிர்ந்திருந்தார். இதன் கீழ் பலரும் சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கருத்திட ஆரம்பித்தனர். ஒரு பயனரோ, இப்போதைய சூழல் சரியாக இல்லை என்பதால் அமைதி காக்கும்படி மனு குமாருக்கு அறிவுரை கூறியிருந்தார்.

அதேபோல ரியல்மீ இந்தியப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி மாதம் ஷேத், அடுத்து அறிமுகமாகவுள்ள ரியல்மீ மொபைல் மாடல்கள் குறித்துப் பதிவிட்டு எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

இந்தச் சூழலால் ஓப்போ நிறுவனம் தனது 5ஜி மொபைலின் அறிமுக நிகழ்ச்சியை இந்தியாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ஸ்ட்ரீமிங் ரத்து செய்யப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனத் தயாரிப்புகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. மக்களின் இந்தக் கோபம் சமூக ஊடகங்களைத் தாண்டி பொதுவெளிக்கும் போகுமா, சீன மொபைல்களின் விற்பனை பாதிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Google+ Linkedin Youtube