பிரேசிலில் முடக்கப்பட்ட வாட்சாப் பே சேவை; இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்தியாவில் இரண்டாண்டு காலமாக செய்ய நினைத்து செய்ய முடியாத ஒன்றை, எப்படியோ பிரேசிலில் செய்துவிட்டோம் என்று வாட்சாப் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஒரு வாரமே ஆகிறது. ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை.

வாட்சாப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது என்பதும், இந்த வணிக முயற்சிக்குப் பின்னால் ஃபேஸ்புக்கின் நிறுவன பலம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆம், இந்தியாவில் அலைபேசி வழி பணப்பரிமாற்ற சந்தையில் கோலோச்சி வரும் பே டிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக வர இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில், வாட்சாப் பே முதல் முறையாக கடந்த வாரம் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரே வாரத்தில் 'வாட்சாப் பே' சேவையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளுக்கு அந்த நாட்டின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் புதிய தேடுபொருளாக உருவாகியுள்ள இந்த விவகாரத்தின் பின்னணி, இந்தியாவில் வாட்சாப் பே அறிமுகமாவதில் உள்ள முட்டுக்கட்டை மற்றும் ஃபேஸ்புக் - ரிலையன்ஸ் இடையிலான வர்த்தக உறவு இதில் செலுத்தவுள்ள தாக்கம் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வாட்சாப் பே என்றால் என்ன?

இந்தியாவில் அலைபேசி வழி பணப்பரிமாற்றத்தில் பெரிய மாற்றத்தை செய்துகொண்டிருக்கும் யு.பி.ஐ. (Unified Payments Interface) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் கூகுள் பே, பே.டி.எம், அமேசான் பே உள்ளிட்டவற்றின் சேவையைப் போன்றதுதான் வாட்சாப் பே.

இவற்றுக்கிடையே உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவென்றால், வாட்சாப் பே செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் தகவல் பறிமாற்றம் செய்யும் சாதாரண வாட்சாப் செயலியே போதுமானது, ஆனால் மற்ற சேவைகளுக்கு தனித்தனியே செயலிகளை பதிவிறக்கம் செய்து கணக்கை துவக்க வேண்டும்.

அடிப்படையில் வாட்சாப் பே என்பது அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் தனது சமூக ஊடக செயலிகளில் வழங்கும் ஃபேஸ்புக் பே என்னும் சேவையின் நீட்சியே ஆகும். அதாவது, ஃபேஸ்புக் பே என்னும் சேவையை தனது சமூக ஊடக மற்றும் குறுஞ்செய்தி சேவை வழங்கும் நிறுவனங்களான ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்சாப் ஆகியவற்றில் படிப்படியாக விரிவுபடுத்தும் பணியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் கால்பதிக்க முயற்சி

ஃபேஸ்புக்கின் ஃபேஸ்புக் பே சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

இந்த நிலையில், இந்த சேவையின் நீட்சியாக 'வாட்சாப் பே' வை உலகில் முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணத்துடன் அதன் முன்னோட்டப் பதிப்பை 2018ஆம் ஆண்டிலிருந்து பரிசோதிக்கத் தொடங்கியது ஃபேஸ்புக். சுமார் 10 லட்சம் பேரை கொண்டு நடத்தப்பட்ட இந்த பரிசோதனை பதிப்பு (பீட்டா வெர்சன்) வெற்றியடையவே அதன் முழு பதிப்பை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்தியாவில் இந்தியாவில் இதுபோன்று செயலி வாயிலாக பணப்பரிமாற்ற சேவையை தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் என்.பி.சி.ஐ. (National Payments Corporation of India) உள்ளிட்டவற்றிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி, இதுபோன்ற சேவையை தொடங்கும் நிறுவனங்கள் பணப்பரிமாற்றத்தை நிர்வகிக்கும் தரவுத்தளத்தை இந்தியாவிலேயே அமைக்க வேண்டும் என்ற முதல் நெறிமுறையை கடைப்பிடிப்பதில் இருந்து வந்த பிரச்சனையால் வாட்சாப் பே இந்தியாவில் அறிமுகமாவதில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.

பிரேசிலில் நடந்தது என்ன?

இந்தியாவில் 10 லட்சம் பேரை கொண்டு வாட்சாப் பே சேவையை பரிசோதனையை செய்தும் அதை முழுவீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்த ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவுக்கு அடுத்து தங்களுக்கு சொந்தமான வாட்சாப் செயலியை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கும் பிரேசிலில் கால்பதிக்க முடிவு செய்தது.

இதன்படி, கடந்த ஜூன் 15ஆம் தேதி பிரேசிலில் உள்ள விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளின் பயன்பாட்டாளர்களுக்கு தங்களது வாட்சாப் செயலியின் வாயிலாக பணம் அனுப்பும், பெறும் வசதியை அளிக்கும் வாட்சாப் பே செயலியை அறிமுகம் செய்வதாக அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வாட்சாப் பே சேவையை பிரேசிலில் உடனடியக தடை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த நாட்டின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரேசில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாட்சாப் பே சேவையை மையாக கொண்டு பிரேசிலில் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான பணப்பரிமாற்றங்களையும் உடனடியாக நிறுத்துமாறு விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனி பிரேசிலில் எந்தவொரு பணப்பரிமாற்ற சேவையை தொடங்குவதற்கும் முன்னர் எங்களிடமிருந்து தேவையான அனுமதியை பெறுவது அவசியம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், நிர்வாக ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

"பல்வேறு தரப்பினரும் போட்டியிடும் வகையிலான சூழலை பராமரித்தல், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு, சேவை குறித்த முன்னனுமதியை பெறாதது உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வேகமான, பாதுகாப்பான, வெளிப்படையான, திறந்த மற்றும் மலிவான பணப்பரிமாற்ற முறையை அமல்படுத்துவதே எங்களது நோக்கமாக இருக்கிறது" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக டெக்கிரன்ச் இணையதள செய்தி நிறுவனத்திடம் பேசிய வாட்சாப் நிர்வாகம், "நாங்கள் திறந்த வணிக முறையை கடைபிடிப்பதற்கே விரும்புகிறோம். பிரேசிலின் உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து செயலாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற முறையைப் போலவே செயல்படும் ஒரு முறையை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக பிரேசில் மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதில் தாங்கள் பங்கெடுக்க ஆர்வமுடன் உள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்சாப் பே இந்தியாவுக்கு வருமா?

வாட்சாப் பே வாயிலாக மேற்கொள்ளும் பணப் பரிமாற்றங்களுக்கான தரவுத்தளம் அல்லது சர்வர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கு இதுவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கட்டையாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வாட்சாப் பே சேவையை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தங்களது தரவுத்தளத்தை உள்நாட்டிலேயே நிர்வகிப்பதற்கு தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


குறிப்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், "இந்தியாவில் நாங்கள் வாட்சாப் பணப்பரிமாற்ற சேவையை தொடங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளூர் வங்கிகள் அனைத்தும் இணைந்து நிதி சேவையை எளிமையாக வழங்க உதவும் இந்தியாவின் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற முறை உலக நாடுகளுக்கு கலங்கரை விளக்கம் போன்றதாகும்" என்று அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து வேறொரு சாதகமான செய்தியும் வந்துள்ளது.

அதாவது, ரிலையன்ஸூக்கு சொந்தமான இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் ஃபேஸ்புக் செய்துள்ள சுமார் 43,500 கோடி ரூபாய் முதலீட்டுக்கு இந்தியாவின் போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் (Competition Commission of India) இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Google+ Linkedin Youtube