மனிதத்தன்மையற்ற செயல்; இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர். காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.#JusticeForJeyarajAndFenix மற்றும் #JusticeForJayarajAndFenix ஆகிய ஹேஷ்டேக்குகளில் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருப்பதால், இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள கண்டன ட்வீட்களின் தொகுப்பு:

ஜெயம் ரவி: #JusticeForJeyarajAndFenix சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை, இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ்: சாத்தான்குளத்தில் நடந்த விஷயம் கொடூரமானது. மனிதத்தன்மைக்கு ஒரு அவமானம். குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள், வைரஸ் கிருமிகளை விட ஆபத்தானவர்கள்.

குஷ்பு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில், மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்வதை நாம் பார்ப்போமா? குற்றம் செய்தவர்கள் தப்பித்துவிடக் கூடாது. தங்களின் அன்பார்ந்தவர்களை ஒரு குடும்பம் இழந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. #JusticeForJeyarajAndFenix

ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம் சம்பவம் கொடூரமானது. முற்றிலும் மிருகத்தனமான செயல். கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி.

ஹன்சிகா: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்டுள்ள குரூரத்தைக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். காவல்துறைக்கும், நமது தேசத்துக்கும் இந்த வெறி பிடித்தவர்கள் அவமானத்தைத் தேடித் தந்துள்ளனர். குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

வரலட்சுமி சரத்குமார்: ஒரு விஷயம் தவறென்றால், தவறு தான். அதை யார் செய்திருந்தாலும் சரி. சாத்தான்குளம் காவல்துறை நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியைத் தருகிறது. அந்த குடும்பத்துக்கு ஆறுதலே தர முடியாது. ஒட்டுமொத்த காவல்துறையையும் இதை வைத்துக் குற்றம்சாட்ட முடியாது. அந்த வெறி பிடித்த இரண்டு பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இமான்: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட வன்முறையைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். முற்றிலும் மிருகத்தனமானது. அவர்கள் அனுபவித்த சித்திரவதையை ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்த இந்த இரக்கமற்ற செயலுக்கு நாம் குரல் கொடுப்போம். ஜெயராஜும், பென்னிக்ஸும், இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

ஜி.வி.பிரகாஷ்: பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை. நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளும் என்பதே வரலாறு. இருவர் மரணத்தை மனிதக் குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்

கதிர்: மக்களைப் பாதுகாக்கிறது என்பதால் தான் சட்டம் ஒழுங்கு மதிக்கப்படுகிறது. அது அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்துலாக மாறக்கூடாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதிக்காக அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நம்புகிறேன்.

ரைசா வில்சன்: இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு தொடுக்க வேண்டும். இது கொலை தான்.

சம்யுக்தா ஹெக்டே: காவல்துறையின் மூர்க்கத்தைச் சகிக்க முடியாது. தவறு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றமா அல்லது தற்காலிக பணி நீக்கமா என்பது குறித்து அரசாங்கம் யோசிக்கிறதா? (அமெரிக்காவின்) ஃப்ளாய்ட் குறித்தும், ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் என்று கூறியவர்களுக்கும் இப்போது என்ன ஆனது? மேற்கிலிருந்து வரும் விஷயங்களைத்தான் ஆதரிப்போமா? நம் விஷயங்களை ஆதரிக்க மாட்டோமா?

அதுல்யா ரவி: முற்றிலும் மனிதத்தன்மையற்ற செயல். சாத்தான்குளத்தில் வாழும் ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராஜும், பென்னிக்ஸும் காவல்துறை அதிகாரியால் மிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உயிர் மீது யாருக்கும் இவ்வளவு அதிகாரம் இருக்கக் கூடாது. இந்த குற்றவாளிகளுக்கு நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரமிது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ராஷி கண்ணா: சீருடையில், காட்டுமிராண்டித்தனமான, குரூரமான செயல்களை செய்துள்ள இவர்களை நினைத்தால் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. நீதி தரப்பட வேண்டும். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சாந்தனு: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இது விசாரணை அல்ல. இது ஒரு கொலை. அனைவரையும் விட சட்டமே மேலானது என்றால், இதுதான் அதன் சக்தியைக் காட்ட சரியான நேரம்.

இயக்குநர் ரத்னகுமார்: இது முற்றிலும் ஒரு அநீதி. விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இப்போது நீதி ஒழுங்காக வழங்கப்படவில்லை என்றால், நீதி அமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தயவுசெய்து இந்த விவகாரத்தை மாற்றிப்பேசி, மற்ற பிரச்சினைகளை வைத்துத் திசைதிருப்பாமல் இருங்கள்.

கெளதம் கார்த்தி: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீதியை, சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய, நல்ல, நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல் அல்ல இது. சீருடையில் இருக்கும் சில காட்டுமிராண்டித்தனமான குற்றவாளிகளின் செயல்.


Google+ Linkedin Youtube