கரோனா; 16..5 கோடி முகக்கவசங்கள்; 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் 16 கோடியே 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்துள்ளன.

கரோனா பெருந்தொற்றுப் பரவலும் பலகட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதித்துள்ளன. அதிலும் குறிப்பாக மகளிரின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.

சிறுதொழில்களில் ஈடுபட்டு வந்த பெண்கள் இந்தக் காலகட்டத்தில் அந்தத் தொழில்களைச் செய்ய முடியாமல் முடங்கிப் போய் உள்ளனர். நகரப் பகுதி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அவர்களுக்கு வங்கிகள் மூலமாக கரோனா சிறப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புற ஏழைகள் மற்றும் நகர்ப்புறத்தில் வீடற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2013ல் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தொடங்கப்பட்டது. தொழில் திறன்களில் பயிற்சி அளித்தல் மற்றும் சுயதொழில் தொடங்க உதவுதல் ஆகியன இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்த இயக்கம் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களை அதிலும் குறிப்பாக மகளிர்களை சுயஉதவிக் குழுக்களாக கட்டமைத்து சிறு சிறு தொழில்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.

இந்த இயக்கத்தின் மூலம் 53 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பலவிதமான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கரோனா நெருக்கடி காலகட்டத்தில் மகளிர் குழுக்களின் பணி சாதனைக்குரியதாக உள்ளது.

இதுவரை மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 கோடியே 51 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து உள்ளனர். அதேபோன்று சுமார் 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் சுமார் 5 லட்சம் லிட்டர் சேனிடைசரையும் தயாரித்து உள்ளனர் என மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Google+ Linkedin Youtube