பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது31). இவர் கோவையில் ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும், திருச்சி மாவட்டம் பாதர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகலா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரியதர்சினி (7) என்ற மகள் உள்ளாள்.


இந்த நிலையில் மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மேகலா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் மேகலா பாதர்பேட்டையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் மகள் பிரியதர்சினியுடன் வசித்து வந்தார். கோர்ட்டில் வழக்கு ஒருபுறம் இருந்தாலும் கணேசும், மேகலாவும் இடையிடையே சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கணேஷ் மேகலாவுடன் தம்மம்பட்டி மண்கரடு மலை அடிவாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது கணேஷ் திடீரென மேகலாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் மேகலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் மேகலாவின் பிணம் அருகே அமர்ந்து கணேஷ் அழுதுகொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதையொட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் கணேஷ் சரண் அடைந்தார்.

போலீசாரிடம் கணேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-

கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்தோம். எனினும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். குடும்ப செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பேன். மேலும் மேகலா நர்சிங் படிக்க நான் கடந்த 2 வருடமாக பணம் கொடுத்து இருக்கிறேன். இன்று(நேற்று) என்னை சந்திக்க வருமாறு கூறினேன். அதையொட்டி இருவரும் மண்கரடு மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது அவளது செல்போனை வாங்கி பார்த்ததில் அவளுடைய வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இதனால் அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே இப்படி இருக்க கூடாது என்று அவளுக்கு அறிவுரை கூறினேன். அப்போது அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் அப்படித்தான் இருப்பேன் என்றும், என் இஷ்டப்படிதான் வாழ்வேன் என்றும் எதிர்த்து பேசினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கத்தியால் மேகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் என் வாழ்க்கை நாசமாகி விட்டதே என அங்கேயே கதறி அழுது கொண்டு இருந்தேன். இவ்வாறு கணேஷ் கூறி உள்ளார்.

Google+ Linkedin Youtube