சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 61 பேர் கைது

திருவட்டார், 

ஆற்றூர்–வெட்டுகுழி சாலை, குட்டகுழி, தேமானூர், தோட்டவாரம், செங்கோடி, பூவங்குழி, முளகுமூடு ஆகிய பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை ஆற்றூர் புளியமூடு சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதற்கு வட்டார செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் சகாய ஆண்டனி, ஜோஸ் மனோகரன், ஐசக் அருள்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 12 பெண்கள் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Google+ Linkedin Youtube